ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

மண்ணறையின் எச்சரிக்கை ....

மண்ணறையின் எச்சரிக்கை ....
அல்லாஹ்வின் திருப்பெயரால்.
மானிடவர்க்கத்தின் முதல் மனிதனாக மலர்ந்த நபி ஆதம் [அலை] முதல், இன்றைய மனிதன் வரை எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் இந்த பூவுலகின் புறப் பரப்பிலே புரண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். மண்ணாலே நம்மை உதிக்க வைத்து, மண்ணுக்கு மேலே குதிக்க வைத்து, மண்ணுக்குள்ளே மடிய வைத்து, மனித வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் இறைவன் அந்த மண்ணை வைத்து எத்தனையோ பாடங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மண்ணுக்கு மேலே அடுக்கடுக்காக அறைகள் கட்டி எவ்வளவு உயரத்தில் நாம் உல்லாச வாழ்வு நடத்தினாலும், இறுதியிலே மண்ணுக்குள் உள்ள அறைக்கு வந்துதான் ஆகவேண்டும். மேலேயுள்ள அறையில் அவன் செய்த ஒவ்வொரு செயலைப் பற்றியும் கீழேயுள்ள அறையில் கூறித்தானாகவேண்டும்.

எந்தவித அரட்டலோ, மிரட்டலோ , உருட்டலோ , காட்ட முடியாது. மிஞ்சிபேசினாலும், கெஞ்சிபேசினாலும், கொஞ்சிபேசினாலும் எதையும் சாதிக்க முடியாது. கையூட்டுக் [இலஞ்சம்] கொடுத்துக் காரியம் சாதிக்கும் கயமைத்தனமும் அங்கு வெற்றிபெறாது பொய்யை கூறி பொழுதுபோக்கும் போக்கிரித்தனமும் அங்கு வெற்றி பெறாது. உள்ளத்தை உள்ளவாறு சொல்லியாக வேண்டும். மாளிகை வாசிக்கும் மண் குடிசை வாசிக்கும் ஒரே நீதி, பணப்பை தலையில் சூட்டிய கிரீடம் போல் மதித்து வாழ்ந்திருப்பானாயின் உயர்த்தப்பட்ட வான். அதே பணப்பை, மிதித்து வாழ்ந்திருப்பானாயின் தாழ்த்தப்படுவான்.
மண்ணறை என்ற இருள் அறையை நோக்கி காலமென்னும் கப்பலில் பயணம் செய்யும் பயணிகள்! நமது மண்ணறையானது நம்மை நோக்கி கீழ்கண்டவாறு பதினைந்து எச்சரிக்கைகளை தினந்தோறும் திண்ணமுடன் உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த எச்சரிக்கைகள் என்ன என்று பார்ப்போம்....
1. ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின் மீது நடந்து சுற்றித் திரிகிறாய், பின்னால் என் வயிற்றுக்குள் அசைவேதுமில்லாமல் ஆழ்ந்து கிடப்பாய் . மறந்துவிடாதே!
2.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின் மீது [ஹராமான] தகாத பொருள்களையெல்லாம் உண்டு சுவைத்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறாய். எனது வயிற்றுக்குள் பாம்புகளும், புழுக்களும், உனது உடலை உண்டு சுவைக்கும்.
3.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின் மீது பாவங்கள் பலதும் செய்து கொண்டிருக்கிறாய். நீ எனது வயிற்றுக்குள் பற்பல வேதனைகளை அனுபவிப்பாய். [இதை அறிவுரையாக ஏற்றுக் கொள்]
4.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின் மீது உவகையோடு சிரித்துக்கொண்டிருக்கிறாய். எனது வயிற்றுக்குள் அழுகையோடு புலம்பிக்கொண்டிருப்பாய் [இதை ஆராய்ந்து பார்]
5.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின் மீது ஆனந்தத்தோடு அகமகிழ்வோடும் இருக்கிறாய். நீ எனது வயிற்றுக்குள் கவலையோடும் கைசேதத்தோடும் இருப்பாய்.[உணர்ந்து கொள்]
6.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது உண்டு கொழுத்துப் பருத்துச் சுகித்திருக்கிறாய். எனது வயிற்றுக்குள் நீ சின்னா பின்னாமாக்கப்பட்டு சிதைந்து சீரழிவாய் [இதை சிந்திக்க தவறாதே]
7. ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது வெளிச்சத்தில் இருக்கிறாய். எனது வயிற்றிலே கும்மிருட்டிலே குடியிருப்பாய்.
8.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது கண்ணியமாகவும், கம்பீரமாகவும் இருக்கிறாய். எனது வயிற்றுக்குள் இழிவாக்கப்படுவாய் [இறுமாப்பு கொள்ளாதே]
9.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது மனைவி மக்களோடும், உற்றார் உறவினர்களோடும் உல்லாசமாக இருக்கிறாய். எனது வயிற்றுக்குள் தன்னந்தனியாக தவித்துக் கொண்டிருப்பாய். [இம்மை இன்பங்களுக்கு இறையாகிவிடாதே]
10. ஆதமுடைய மகனே! எனது முதுகின்மீது மணங்கமல வாசனைத் திரவியங்களை பூசி அலங்காரமாகத் திரிகிறாய், எனது வயிற்றுக்குள் நாற்றமெடுத்து துர்வாடை பிடித்துக்கிடப்பாய்.
11.ஆதமுடைய மகனே! எனது வயிற்றுக்குள் நிகழவிருக்கிற விதவிதமான வேதனைகளையும் பயங்கரங்களையும் அறியாமல் எனது முதுகின்மீது திரிகின்றாய்.
12.ஆதமுடைய மகனே! மண்ணரையாகிய நான் இருள் நிறைந்த பயங்கரமான தன்மையின் வீடு எனபதை இக்காரணத்தால் மறந்து அலைகிறாய்.
13.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது இறைவனுக்கு வழிப்பட்டு நடந்திருந்தால் மண்ணறையாகிய நான், உனக்குச் சொர்க்க பூங்காவாக ஆவேன். இன்றேல் உனக்கு வேதனைக்குரிய இடமாவேன். [பயந்து நடந்துகொள்]
14.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது இருக்கையில் ஓதிய குரான் என் வயிற்றுக்குள் உனக்குத் துணையாகத் துலங்கும். நீ தொழுத தொழுகை உனக்கு பிரகாசம் கொடுக்கும். நீ முறையோடு செய்த தர்மம் உனக்கு விரைப்பாக விளங்கும். நீ செய்த ஏனைய நற்காரியங்கள் உனக்கு எந்தவித வேதனையும் வராமல் பாதுகாத்து வெற்றியை வழங்கும். [உனது வெற்றிக்கு முயற்சி செய்!]
15.ஆதமுடைய மகனே! நீ எனது முதுகின்மீது உனது படுக்கை, உடுக்கை,உணவு, உறையுள், செல்வங்கள் ஆகிய அனைத்தையும் அதர்ம வழியில் அலங்கரித்து ஆனந்தம் அடைகிறாய். உனது மனோ இச்சைகளுக்கு இசைந்து இயங்குகிறாய். ஆனால் ஒருநாள் வரும், அந்நாளையில் நீ என்னுள் வந்தே தீரவேண்டும். அப்போது நீ வேதனைப் படுவாய், வெட்கப்படுவாய், அழுது புலம்புவாய் துக்கப்படுவாய், துயரப்படுவாய், இழிவாக்கப்படுவாய் இருளிலே தத்தளித்து தடுமாறுவாய். கைசேதப்படுவாய் [தவறாக நடக்காதே] என மண்ணறை மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறது.
அல்லாஹ் நம் அனைவரையும் இந்த மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றுவானாக! இந்த மண்ணறையை நமக்கு சொர்க்க பூங்காவாகா ஆக்கிவைப்பானாக!! இன்ஷாஅல்லாஹ் நம் தொழுகையில் தினந்தோறும் இந்த மண்ணறையின் வேதனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!